ஜனவரி,
பிப்ரவரி, மார்ச் என நடப்பு வருடத்தின் கடைசிக் காலாண்டில் இருக்கிறோம்.
தவிர, இன்னும் சில நாட்களிலேயே மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய
இருக்கிறார் மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லி.
இந்தச் சமயத்தில், ரூ.1.50 லட்சம் வரிச் சலுகைப் பெறுவதற்கு எந்த வகைத்
திட்டங்களை நாடலாம் என்கிற பெரும் குழப்பத்தில் நம்மில் பலர் இருப்போம்.
நம் முன் பல்வேறு திட்டங்கள் இருப்பது நமது குழப்பத்தை மேலும்
பெரிதாக்கும். பலரது குழப்பம், எண்டோவ்மென்ட் / மணிபேக்/ யூலிப்/ ஹோல்
லைஃப் ஆகிய இன்ஷூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்வதா அல்லது டாக்ஸ் சேவிங்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதா என்பதே.
இந்தக் குழப்பத்திலிருந்து விடுபடும் வழி தெரியாமல், நம்மில் பலரும்
சொல்லிவைத்த மாதிரி எடுப்பது இன்ஷூரன்ஸ் பாலிசிகளைத்தான். காரணம்,
இன்ஷூரன்ஸ் முகவர்களின் நெருக்கம். வேறு எந்தத் திட்டங்களைக் காட்டிலும்
இன்ஷூரன்ஸ் முகவர்கள் நம்மைச் சுற்றிலும் மிக அதிகமாக இருக்கிறார்கள்.
குழப்பத்தில் இருக்கும் நம்மை அவர்கள் எளிதில் மூளைச்சலவை செய்து, நமக்குத்
தேவை இல்லாத பாலிசியை நம்மிடம் விற்றுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
![](https://img.vikatan.com/nanayam/2017/02/nuowez/images/22p1.jpg)
அவசர அவசரமாக...
வருடக் கடைசியில் சென்று அவசர அவசரமாக வரிச் சலுகை பெறுவதற்காக ஏனோதானோ
என்று ஒரு முதலீட்டைத் தேர்வு செய்யாமல், திட்டமிட்டுச் செய்தால் அதிக
வருமானம் கிடைப்பதுடன் முதலீட்டில் நமக்குத் தேவைப்படும் நெகிழ்வுத்
தன்மையும் (Flexibility) கிடைக்கும்.
ஆனால், நம் தமிழ் மக்களின் கண்ணோட்டமே வேறு. நம்மில் பலர் பணத்தைச்
செலவழித்தால், அதற்குப் பதிலாக என்ன திரும்பக் கிடைக்கும் என்றுதான்
பார்ப்பார்கள். அவ்வாறு திரும்பக் கிடைக்கும் தொகையின் மதிப்பு என்ன என்று
பலரும் ஆராய்வதில்லை. நாம் பணம் போட்டால், நமக்கு ஏதாவது திரும்பக்
கிடைக்க வேண்டும் என்பதே பெரும்பாலோரின் கொள்கையாக உள்ளது. ஆகையால்தான்
எண்டோவ்மென்ட், மணிபேக் போன்ற பாலிசிகளின் விற்பனை இப்போதும் ஜோராக
இருக்கிறது. ஆனால், பணம் திரும்பக் கிடைக்காது என்கிற ஒரே காரணத்துக்காக
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கவே பலரும் யோசிக்கிறார்கள்.
உங்களுக்கு என்ன தேவை?
ஓர் உதாரணம் பார்ப்போம். நீங்கள் காலையில் சாப்பிடுவதற்கு ஹோட்டலுக்குப்
போகிறீர்கள். உங்களுக்குவேண்டியது இரண்டு இட்லி. ஆனால், வெயிட்டரோ மெனு
கார்டைக் காண்பித்து, நீங்கள் ‘காம்போ’ (combo) பிளானைத் தேர்வு செய்தால்,
இட்லி, தோசை, வடை, கேசரி கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறார்.
நீங்கள் இரண்டு இட்லி மட்டும் சாப்பிட்டு இருந்தால், உங்களுக்கு ரூ.40
மட்டும் செலவாகி இருக்கும். ஆனால், நீங்களோ ‘காம்போ’ எடுத்துக் கொண்டதால்,
ரூ.100-க்கு மேல் செலவு ஆகிவிட்டது. அதோடு அல்லாமல், பணம் தந்துவிட்டோமே
என்று ஏதும் மீதி வைக்காமல் சாப்பிட்டு, உங்களின் கொழுப்பை அதிகரித்துக்
கொள்கிறீர்கள். மேலும், சர்க்கரை நோய் இருக்கும் உங்களுக்கு ‘காம்போ’
டிபனில் கேசரி போனஸாகக் கிடைத்துள்ளது!
வெவ்வேறு குணங்கள்
காம்போ டிபன் போலத்தான் எண்டோவ்மென்ட், யூலிப் மற்றும் மணிபேக் பாலிசிகள்.
உங்களுக்குத் தேவை இல்லாதவை எல்லாம் நீங்கள் கேட்காமலே உங்கள் தலையில்
கட்டப்படுகின்றன. தேவையானதை மட்டும் நீங்கள் எடுத்துக்கொண்டால், பணம்
மிச்சமாவதுடன், மன உளைச்சலும் குறையும். மேலும், நீங்கள் அந்த முதலீட்டை
அல்லது காப்பீட்டை அலசி ஆராய்ந்து எடுப்பீர்கள்.
முதலீட்டின் குணாதியங்கள் என்பவை வேறு; ஆயுள் காப்பீட்டின் குணாதியங்கள்
என்பவை வேறு. முதலீடு என்பது நீங்கள் எடுக்கும் ரிஸ்க்குக்கு ஏற்ப வருமானம்
தரக்கூடியதாக இருக்க வேண்டும். பணம் தேவைப்படுகிறபோது எடுத்துக்கொள்ள
முடிய வேண்டும். தொடர்ந்து செய்யும் முதலீட்டைத் தேவைப்பட்டால்,
நிறுத்துவதற்கான வசதி இருக்க வேண்டும். இப்படி நாம் சொல்லிக்கொண்டே
போகலாம்.
எது சரி..?
ஆயுள் காப்பீடு என்பது, நாம் இந்த உலகில் இல்லாமல் போனால், நம்மைச்
சார்ந்து இருப்பவர்களுக்கு, நாம் சம்பாதித்த அளவு பணத்தைப் பெற்றுத்
தருமளவுக்குப் போதுமானதாக இருக்க வேண்டும். தேவைப்படாதபோது
நிறுத்திக்கொள்ளும் வசதியும் அதில் இருக்க வேண்டும். இந்தக் குணாதியங்களைக்
கொண்டு நாம் பார்த்தோமேயானால், நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...
உங்கள் வயதைப் பொறுத்து, வருமானத்தைப் பொறுத்து, உங்கள் ஆண்டு வருமானத்தைப்
போல், 10 – 40 மடங்கு ஆயுள் காப்பீடு இருக்க வேண்டும். உதாரணத்துக்கு,
உங்கள் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் எனில், உங்களின் ஆயுள் காப்பீடு ரூ.30 –
120 லட்சமாக இருக்க வேண்டும்.
இந்த அளவுக்கு நீங்கள் ஆயுள் காப்பீடு எடுக்க வேண்டுமானால், அதை டேர்ம்
இன்ஷூரன்ஸ் மூலமாக மட்டுமே குறைந்த பிரிமீயத்தில் எடுக்க முடியும். தற்போது
நம்மில் பலரும் எடுக்கும் எண்டோவ்மென்ட் பாலிசி மூலம் இந்த அளவுக்கு
இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டுமெனில், அதற்கு பெரும் தொகையை பிரீமியமாகக் கட்ட
வேண்டி இருக்கும். ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்துக்கு மட்டுமே வரிச் சலுகை
கிடைக்கும் என்கிறபோது பெரும் தொகையை ஆண்டுதோறும் பிரீமியமாகக் கட்டி என்ன
பிரயோஜனம்? சில ஆயிரங்கள் மட்டுமே பிரீமியமாகக் கட்டுகிற மாதிரி இருக்கும்
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்
உதவுகிற மாதிரி இருக்கும் ஒரு ஃப்ளோட்டர் மெடிக்ளெய்ம் இன்ஷூரன்ஸ்
பாலிசியையும் நீங்கள் எடுத்து விட்டால் போதும். எண்டோவ்மென்ட் பாலிசிகளை
எடுப்பதைத் தவிர்த்துவிடுவதே நல்லது.
இஎல்எஸ்எஸ் ஃபண்ட்
எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுப்பதற்குப் பதிலாக, வரிச் சலுகை உங்களுக்குத்
தேவைப்படும் அளவுக்கு (அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம்) இஎல்எஸ்எஸ் (ELSS –
Equity Linked Savings Schemes) என்று சொல்லப்படும் டாக்ஸ் சேவர்
மியூச்சுவல் ஃபண்டுகளில் மொத்தமாகவோ அல்லது எஸ்ஐபி மூலமாகவோ முதலீடு
செய்வது சாலச் சிறந்தது. ஒரேமுறை முதலீடு செய்வதைவிட, மாதந்்தோறும் முதலீடு
செய்யும் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும்போது ஒரு சில மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனங்கள் போனஸாக இலவச ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் சேர்த்தே
தருகின்றன. ஆனால், இந்த இலவச ஆயுள் காப்பீட்டு பாலிசி மட்டுமே ஒருவருக்குப்
போதுமானதாக இருக்காது என்பதை மறந்துவிடக்கூடாது.
பொதுவாக, நாம் பரிந்துரை செய்யும் எதுவுமே இரண்டு வகையான ஆராய்ச்சிகளை
அடிப்படை யாகக் கொண்டிருக்கும். ஒன்று, குவாலிடேட்டிவ்; மற்றொன்று,
குவான்டிடேட்டிவ். இதையும் உதாரணத்துடன் பார்ப்போம்.
இருபது வருடங்களுக்கு முன்பு உங்களின் வயது 30 என்று எடுத்துக்கொள்வோம்.
அப்போது வருடத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு பிரீமியம் கட்டுகிற மாதிரி ஒரு
எண்டோவ்மென்ட் பாலிசி எடுத்தி ருப்பீர்கள். உங்களுக்கு ஆயுள் காப்பீடு
ரூ.20 லட்சத்துக்குத் தந்திருப்பார்கள். அந்த பாலிசி இந்த வருடம்
முதிர்வடைந்திருக்கும். உங்களுக்குத் தோராயமாக வருடத்துக்கு 6% - 7%
வருமானம் கிடைக்கும்பட்சத்தில், தற்போது முதிர்வுத் தொகையாக ரூ.37 – 41
லட்சம் கிடைத்திருக்கும்.
எதில் அதிக வருமானம்?
எண்டோவ்மென்ட் பாலிசி எடுப்பதற்குப் பதிலாக, டேர்ம் இன்ஷூரன்ஸ் ரூ.20
லட்சத்துக்கு எடுத்துக்கொண்டு, அந்தச் செலவு போக மீதமுள்ள தொகையைக் கடந்த
20 வருடங்களில் இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டுகளில்
முதலீடு செய்திருந்தால், உங்களின் தற்போதைய வேல்யூ ரூ.264 லட்சமாக, அதாவது
ரூ.2.64 கோடியாக இருக்கும். (பார்க்க அட்டவணை -1) 20 லட்ச ரூபாய்க்கு
அதிகபட்சமாக பிரீமியம் ரூ.4,000 என எடுத்துக் கொண்டுள்ளோம்.
இன்ஷூரன்ஸ் மூலம் சராசரியாக 6 - 7 சத விகிதத்துக்கு மேல் வருமானம்
கிடைத்தால் ஆச்சர்யமே! கடந்த இருபது வருடங்களில் நான்கு இஎல்எஸ்எஸ்
ஃபண்டுகள் (பிர்லா, டாடா, கனரா ரொபேகோ, ஹெச்.டி.எஃப்.சி) நடப்பில்
இருந்துள்ளன. இந்த நான்கு ஃபண்டு களில் சராசரி ஆண்டுக் கூட்டு வருமான
வளர்ச்சி (Average CAGR) 23.20% (ஜனவரி 6, 2017 நிலவரப்படி) ஆகும். அதையே
நாம் கணக்குக்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதே அளவு வருமானத்தை
வருங்காலத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து எதிர்பார்க்கலாமா என்ற
கேள்வி உங்களுக்கு எழும்.
கடந்த காலத்தில் கிடைத்த அளவுக்கு வருமானம் கிடைக்கா விட்டாலும், சராசரியாக
13.50% கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்
வட்டி விகிதம் குறையக்குறைய, இன்ஷூரன்ஸ் திட்டங்கள் மூலம் கிடைக்கும்
வருமானமும் குறையும் என்பதை மறக்கக் கூடாது.
சரியான முதலீடு
ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் அடுத்த 20 ஆண்டுகளில் 12 முதல்
15% நீங்கள் தேர்வுசெய்யும் ஃபண்ட் திட்டத்தைப் பொறுத்துக் கிடைக்க
வாய்ப்பிருக்கிறது.
ஆகவே, சராசரியாக நமது கணக்கீட்டுக்கு 13.50% என எடுத்துக் கொண்டுள்ளோம்.
(பார்க்க அட்டவணை - 2) அதேபோல், எண்டோவ்மென்ட்/ மணிபேக் போன்ற
பாலிசிகளிலிருந்து அதிகபட்சமாக 6 – 7% வருமானம் கிடைக்கும். நாம் சராசரியாக
6.50% என்று எடுத்துக் கொண்டுள்ளோம்.
இந்த அட்டவணைகளைப் பார்த்தால், எந்த வகையான ஆப்ஷனை நீங்கள் தேர்வுசெய்ய
வேண்டும் என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். அதாவது, போதிய அளவுக்கு டேர்ம்
இன்ஷூரன்ஸ், மெடிக்ளெய்ம் பாலிசி எடுத்துக் கொண்டபின், இஎல்எஸ்எஸ்
ஃபண்டுகளில் முதலீடு செய்வதே வரிச் சலுகை பெறுவதற்கான மிகச் சரியான
முதலீடாக இருக்கும் என்பதைச் சொல்லவே தேவை இல்லை!