Tuesday, February 28, 2017

கார்டுல பெட்ரோல் போட்டா இவ்வளவு லாபமா!?

உங்களுக்கு 'கிரெடிட் கார்டு’ வேண்டுமா? எனக் கேட்டு வீட்டுக்கே வந்து தரும் நிலைமை இருக்கிறது. ஆனால், இதனை யாரும் சரியாக பயன்படுத்துவதில்லை. கார்டை வாங்கிவிட்டு சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். கிரெடிட் கார்டு மூலம் டெலிபோன் பில், எலக்ட்ரிசிட்டி பில், இன்ஷூரன்ஸ் பிரீமியம், சினிமா மற்றும் ரயில் டிக்கெட் புக்கிங் வசதி எனப் பல வசதிகள் மற்றும் சலுகைகள் இருக்கின்றன. இதில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டுக்கான பிரத்யேக கார்டுகளும் உள்ளன.

பெட்ரோல், டீசலுக்காக கார்டு!
 
உதாரணத்துக்கு உங்களுடைய வாகனத்தில், நீங்கள் தினமும் அலுவலகத்துக்குச் சென்று வருகிறீர்கள்; வேலை நிமித்தமாகவோ அல்லது நண்பர்களுடனோ அடிக்கடி பயணம் செய்கிறீர்கள்; ஆண்டுக்குப் பல முறை சொந்த ஊருக்குச் சென்று வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

இதற்கான பயணத்தின்போது பெட்ரோல், டீசல் போடும் போது, பணத்துக்குப் பதில் கார்டாக பயன்படுத்தினால், கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ரிவார்டு பாயின்டுகள் என பலதரப்பட்ட சேவைகளை அளிக்கின்றன. வெவ்வேறு கார்டுகள் அளிக்கும் பல்வேறு வகையான சலுகைகளை அலசிப் பார்த்து, உங்களுக்கு எது பொருந்துமோ, எது அதிகப் பயனளிக்குமோ அதைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

ஆண்டுக் கட்டணம்!

இந்தியன் ஆயில் சிட்டி பிளாட்டினம், ஐசிஐசிஐ பேங்க் ஹெபிசிஎல், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மெம்பர்சிப் ரிவார்ட்ஸ், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சூப்பர் வேல்யூ டைட்டானியம் என பல்வேறு கார்டுகள் சந்தையில் இருக்கின்றன. ஒவ்வொரு கிரெடிட் கார்டுக்கும் ஆண்டுக் கட்டணம் மாறுபடுகிறது. சில கார்டுகளில் ஆண்டுக் கட்டணம் குறைந்தபட்சம் 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை இருக்கின்றன. சில கார்டுகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவு செய்தால் ஆண்டு கட்டணம் தள்ளுபடி என்ற சலுகைகளும் உண்டு.

Add On கார்டு!

முதன்மை கிரெடிட் கார்டு போலவே Add On கார்டும் சமமான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. இதற்குக் காரணம், பிரதான கிரெடிட் கார்டில் செய்யப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் இந்தக் கார்டிலும் செய்யலாம். இதன் மூலம் ஒருவர் மட்டுமல்லாது, உங்கள் மனைவியோ அல்லது குழந்தையோ ஆட் ஆன் கார்டு மூலம் பயன்பெறலாம்.

சேவை வரி கிடையாது!

பெட்ரோல் பங்க்கில் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு இனி கட்டணம் கிடையாது என அரசு அறிவித்துள்ளது. டெபிட்/கிரெடிட் கார்டுகளை பெட்ரோல் பங்க்கில் பயன்படுத்தினால் பரிவர்த்தனை கட்டணம் கிடையாது என்பது நல்ல விஷயம். இதற்கு முன்னர் கிரெடிட் கார்டுகளுக்கான பரிவர்த்தனைக்கு 1.5 சதவீதம் வரை வரி வசூலிக்கப்பட்டது. இப்போது, பெட்ரோல் பங்க்கில் கார்டு பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் என்பது ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக வரி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காணிக்கலாம்!

கிரெடிட் கார்டு எங்கே, எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளது என உடனடி தகவல் கிடைத்து விடும் என்பதால், கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளைச் சுலபமாகக் கண்காணிக்கலாம். ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு உபயோகத்துக்குப் பின்னர் நீங்கள் என்ன செலவு செய்தீர்கள், எவ்வளவு செலவு செய்தீர்கள், எங்கு செலவு செய்தீர்கள் என்ற தகவலும் எஸ்எம்எஸ் ஆக வரும். இது அவ்வப்போது நம் செலவுகளைத் தொகுக்கவும் உதவும் என்பது கூடுதல் வசதி.

போனஸ் பாயின்ட்ஸ்!

உங்கள் கார்டை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வெகுமதி புள்ளிகளைச் சில வங்கிகள் அளிக்கிறது. இது ஆட் ஆன் கார்டுகளுக்கும் பொருந்தும். உங்கள் கணக்கில் போதிய வெகுமதி புள்ளிகள் சேர்ந்தவுடன், அதனைப் பணமாகப் பெற்றுக் கொள்ளலாம். இந்த கார்டுகளைப் பெட்ரோல் பங்க்-ல் பயன்படுத்தினால், குறைந்தபட்சம் 2.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை போனஸ் புள்ளிகளாக கிடைக்கும்.

உதாரணத்துக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் செலவழித்தால் ரூ.5000 கேஷ்பேக் ஆக கிடைக்கும். இதில் ஒவ்வொரு நிறுவனங்களும் போனஸ் பாயின்ட், ரிவார்ட் பாயின்ட் என ஆஃபரை அள்ளித் தெளிக்கின்றன. அடிக்கடி பயணம் செய்பவர் அல்லது பயணம் செய்வதே தொழிலாக இருப்பவர்களுக்கு பெட்ரோல், டீசலை நிரப்ப பணத்துக்கு பதில் கார்டு பயன்படுத்துவது நிச்சயம் லாபம்தான்.

உதாரணத்துக்கு, ஒரு கால் டாக்சி டிரைவர் ஒரு நாளைக்கு குறைந்தது 20 முதல் 25 லிட்டர் வரை டீசல் நிரப்புகிறார். ஒரு லிட்டர் டீசல் விலை 60 ரூபாய். 25 லிட்டர் எனில் ஒரு நாளைக்கு 1,500 ரூபாய் செலவிடுகின்றனர். மாதம் 750 லிட்டர் எனில் 45,0000 ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. கிரெடிட் கார்டு பயன்படுத்தி 5% கேஷ்பேக் என்றால் மாதம் ரூ.2,250 மிச்சம். இதுவே 365 நாள், ஒரு ஆண்டுக்கு 9,125 லிட்டர் செலவிட வேண்டியுள்ளது.

இதனடிப்படையில் கணக்கீட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு ரூ.5,47,500க்கு டீசல் நிரப்ப வேண்டியுள்ளது. இதுவே கார்டாக பயன்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.27,375 வரை மிச்சப்படுத்தலாம். மாதக் கணக்கில் பார்க்கும்போது இது ஒரு சிறிய தொகையாக இருந்தாலும், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் ஒரு பெரிய தொகை நிச்சயம் மிச்சமாகும்.

ஒட்டுமொத்தத்தில் பெட்ரோல், டீசல் போடும்போது ரொக்கத்துக்குப் பதில் கார்டாக பயன்படுத்துவதால் பல்வேறு வசதிகளும், சலுகைகளும் கிடைக்கிறது. அதேசமயம் கிரெடிட் கார்டை கவனமாகவும், எல்லை மீறாமலும் பயன்படுத்த வேண்டியது அவசியம். கிரெடிட் கார்டு அளவுக்கு மீறினால், நஞ்சாகிவிடும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

No comments: