Thursday, February 2, 2017

பாகற்காய்

நினைத்ததுமே அதன் கசப்புத் தன்மைதான் நம் நாவில் வந்து நிற்கும். கசப்பு என்றதும் அது விஷம் என்று நினைக்க வேண்டாம். எவ்வளவு கசப்பு இருந்தாலும் நம் உடல் பாகற்காயில் உள்ள தேவையான சத்துக்களை எடுத்துக் கொண்டு மீதமுள்ளவற்றை கழிவாக வெளியே தள்ளிவிடும். ஆனால், பாகற்காய்க்கு நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன.

பாகற்காயில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உள்ளன. பாகற்காயைச் சமைத்து சாப்பிட்டு வருவதன்மூலம் உணவுப் பையிலுள்ள பூச்சிகள் கொல்லப்படுவதோடு, பசியைத் தூண்டும். மேலும், பித்தத்தைத் தணிக்கும் இது பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவக்கூடியது. சமையலில் சேர்க்கும்போது புளி சேர்த்துக்கொள்வது நல்லது.

அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், இரைப்பு, மூலம் போன்றவை சரியாகும்.பாகற்காயின் தளிர் இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இருமல், வயிற்றுப்போக்கு, நீரிழிவு போன்றவை சரியாகும்.

பாகல் இலையின் சாறு ஓர் அவுன்ஸ் எடுத்து அதனுடன் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத்தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் விஷ காய்ச்சல் தணியும். உள்ளங்காலில் எரிச்சல் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் பாகல் இலைச்சாற்றை தடவி வந்தால் குணம் கிடைக்கும்.

இதேபோல் பாகற்காய் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, வெளிமூலம் உள்ள இடத்தில் (பொறுக்கும் சூட்டில்) 40 நாட்கள் தொடர்ந்து கட்டி வந்தால் பிரச்னை தீரும். 100 மில்லி இலைச் சாற்றை வாரம் ஒருநாள் குடித்து வந்தால், சிறுநீரில் சர்க்கரை அளவு குறையும். இதேபோல் மிதிபாகல் இலை, பழம் மற்றும் நாவல் பட்டை ஆகியவற்றை சாறு எடுத்து 30 மில்லி அளவு தொடர்ந்து குடித்து வந்தால் நீரிழிவு நோய் நீங்கும்.

இதை சாப்பிடும்போது இறைச்சி உணவுகள் உட்கொள்வதை நிறுத்த வேண்டும். மேலும் பொதுவாக சர்க்கரை வியாதிக்கு முற்றிய பாகற்காய் மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் பழம் உடல் ஊட்டத்துக்கு சிறந்த டானிக்காகவும், மாத விடாய் ஒழுங்கின்மையைச் சரிப்படுத்தவும் உதவுகிறது.

உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சாறு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி சருமம் பளபளப்பாகி விடுமாம்.

No comments: