பெண்களின்
ஹேண்ட்பேக், கர்ணனின் கவச குண்டலம் போன்று
உடலோடு ஒட்டிப் பிறந்தது. பெண்களின் பலவித தேவைகளைத் தன்னிடம்
கொண்டிருக்கும் இவை, டிசைன் மற்றும்
அளவுகளில் மாறுபடும். குட்டீஸ் முதல் குடும்பத்தின் அத்தனை
பேருக்குமான பொருள்களும் அதில் அடைக்கலமாகி இருக்கும்.
போதாக்குறைக்கு... போகும் வழியில் நினைக்கும்
பொருள்களை வாங்கி நிறைத்து கொள்வோம்.
சில சமயம் பையில் ஜிப்
போட முடியாத அளவுக்கு மூச்சுத் திணற வைப்போம். ''இப்படி
ஏற்றும் பொருள்களின் எடை அதிகரிக்க அதிகரிக்க,
பிரச்னைகளையும் அள்ளித் தருகிறது என்பது பலருக்கும் தெரிவதிலை.
ஹேண்ட்பேக்கை முறையாகப் பராமரிக்காமல் இருப்பதால், அது நோய் பரப்பும்
பொருளாகவும் மாறிவருகிறது'' என்கிறார், சேலத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ரம்யா.
‘‘பெண்கள்
அதிகம் பயன்படுத்துவது ஷோல்டர் பேக் வகைகளையே. வேலைக்குச்
செல்லும் பெண்கள், தங்களுக்குத் தேவையான குடை, வாட்டர் பாட்டில்,
லன்ச் பாக்ஸ், முக்கியமான பேப்பர்கள், மேக்கப் வகையறாக்களை ஹேண்ட் பேக்கில் வைத்துக்கொள்கிறார்கள்.
குறைந்தபட்சம் நான்கு கிலோ பொருள்களுடன்
ஒரு பக்கமாக மட்டுமே மாட்டிக்கொண்டு செல்வார்கள். இப்படித் தொடர்ந்து பயன்படுத்துவதால், என்னென்ன பிரச்னைகள் வருகிறது தெரியுமா... தோள்பட்டையில் உள்ள நரம்புகள் நசுங்கி,
கையில் வலியை ஏற்படுத்தும். அந்தப்
பகுதியின் தசைகளும் பாதிப்படையும். கழுத்தில் ஆரம்பித்து தோளில் முடியும் எலும்பை,
‘ஆக்சிலரி போர்ன்’ என்றும் 'பியூட்டி போர்ன்' என்றும் சொல்வார்கள். அந்த எலும்பையும் ஹேண்ட்பேக்
அழுத்தி பிரச்னையை உண்டாக்குகிறது.
இது மட்டுமா... பலரும் ஹேண்ட்பேக்கை வாங்குவதோடு
சரி, கடைசியில் தூக்கி வீசும் வரை
அவற்றை துவைத்து சுத்தம் செய்வதேயில்லை.ரெஸ்ட் ரூம் முதல்
ரெஸ்ட்டாரென்ட் வரை தன்னுடனே எடுத்துச்
செல்கிறார்கள். இப்படிப் போகும் இடமெல்லாம் கிருமிகளைப்
பெற்றுக்கொண்டு வீட்டுக்குள் படுக்கை அறை வரை கொண்டு
வரப்படுகிறது ஹேண்ட் பேக். குழந்தையை
மடியில் வைத்திருக்கும்போது, ஹேண்ட்பேக்கை வாயில்வைத்து சப்புவதையும் பார்க்கலாம். இதனால், குழந்தைகளும் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். இது பற்றிய விழிப்புஉணர்வே
நூற்றில் தொண்ணூறு பெண்களிடம் இல்லை.
சரி, இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?
பெண்கள்
தங்களுக்கான பெர்சனல் பொருள்கள் இல்லாமல் வெளியில் செல்ல முடியாது. அதனால்,
ஹேண்ட்பேக் அவசியம். ஆனால், ஒரு ஹேண்ட்பேக்கை
வாங்கும்போதே அதன் எடையைக் கவனிக்கவும்.
அன்றாடம் பயன்படுத்தும் பேக் எனில், லைட்
வெயிட்டாக இருக்கட்டும். அடிக்கடி துவைத்துச் சுத்தம்செய்ய எளிதாக இருக்கட்டும்.
தோள் பகுதியில் வரும் ஸ்ட்ராப், பட்டையாக
இருக்கட்டும். ஒரே பக்கமாகத் தூக்கிச்சென்று
தோளில் ஏற்படும் வலியைத் தடுக்க... இரண்டுத் தோள்களிலும் மாட்டிக்கொள்ளும்படியான பின்பக்க பேக்கைப் பயன்படுத்தலாம். இல்லையா... ஷோல்டர் பேக்கை பயன்படுத்தும்போது வலது
கை, இடது கை என
அடிக்கடி பையை மாற்றி அணியுங்கள்.
அனைத்துப் பொருள்களையும் ஹேண்ட்பேக்கில் அடைக்காமல், உணவு மற்றும் தண்ணீர்
ஆகியவற்றுக்கு லஞ்ச் பேக்கைப் பயன்படுத்துங்கள்.
ஹேண்ட்பேக்கில்
பல அறைகள் இருந்தால், அதில்
வைக்க வேண்டிய முக்கிய பொருள்களை லிஸ்ட் போடவும். வீட்டில்
பயன்படுத்தும் பொருளை, அலுவலகம் கிளம்பும் முன்பு, வீட்டிலேயே எடுத்துவைத்து விடவும். இதுபோல அலுவலகம் சார்ந்த
விஷயத்தையும் பயன்படுத்தலாம். இதனால் பையினால் ஏற்படும்
தேவையில்லாத வலியைத் தவிர்க்கலாம்.
ஷாப்பிங்
மற்றும் சுற்றுலா செல்லும்போது பெண்கள் மட்டுமே மொத்த பொறுப்புகளையும் தனது
ஹேண்ட்பேக்கில் நிறைத்துக்கொள்ள வேண்டியதில்லை. கணவர் மற்றும் குழந்தைகளுக்கு
என்று தனித்தனி பையைக் கொடுத்துவிடவும். அதில்,
அவர்களுக்குத் தேவையான பொருள்களை வைத்துக்கொள்ளப் பழக்கப்படுத்தவும். வாங்கும் புதிய பொருள்களையும் தேவையானவர்களின்
பைகளில் வைத்துவிடவும்.
அடிக்கடி ஹேண்ட்பேக்கை சுத்தம்செய்து தேவையற்ற காகிதங்கள், பயன்பாடில்லாத பொருள்களை அப்புறப்படுத்தவும். சோப்புத் தூள் அல்லது கிளீனிங் லிக்விட் பயன்படுத்தி ஹேண்ட்பேக்கின் வெளிப்புறப் பகுதியைச் சுத்தம் செய்யவும். மொத்தத்தில் ஹேண்ட்பேக்கை லக்கேஜ் ஏற்றும் லாரியாக இல்லாமல், மயிலிறகாக மாற்றிக்கொள்ளவும்.
No comments:
Post a Comment