Thursday, February 16, 2017



நம் உடலுக்குள் ஜீவநதி ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் பெயர் ரத்தம். ரத்த ஓட்டம்தான் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைச் சுமந்துசென்று அவற்றை உயிர்ப்புடனும் துடிப்புடனும் வைத்திருக்கிறது. நோய் பாதிப்பில் இருந்து உடலைக் காக்கும் வெள்ளை அணுக்களைக் கொண்டிருக்கிறது. உறுப்புகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்தி, உடல் சுழற்சி எனும் அடிப்படையான விஷயத்துக்கு அச்சாணியாக இருக்கிறது. இந்த ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்கும் முக்கியமான 15 உணவுகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

பூண்டு

நம் மரபில் மிகவும் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு செயல்படு உணவு (Functional food) பூண்டு. இதில் உள்ள ‘அல்லிசின்’ (Allicin) என்ற வேதிப்பொருள், ரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருப்பதோடு, உடலில் கொழுப்புச்சத்தைக் கட்டுப்படுத்தி, இதயம், மூளை மற்றும் செரிமான மண்டலத்தையும் பாதுகாக்கிறது.

கேரட்

கேரட்டில் உள்ள பீட்டா ‘கரோட்டின்’ நம் ரத்தத்தைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ரத்த உற்பத்தியிலும், சிவப்பு அணுக்கள் உற்பத்தியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. முக்கியமாக, புற்றுநோய்க் கிருமிகள் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்கிறது.

மீன்கள், இறால், நண்டு

சிலவகை மீன்களில் ஒமேகா 3 மிகுந்துள்ளது. இது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இதனால், உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. இதயம், மூளை இரண்டும் வலுவடைகின்றன. மேலும், அழிந்துபோன செல்களால் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க, இதில் உள்ள துத்தநாகம் உதவுகிறது. எனவே, வாரம் ஒருநாள் இவற்றில் ஒன்றைச் சாப்பிடலாம்.

சின்ன வெங்காயம்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சின்ன வெங்காயம், ரத்தத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்க்கிருமித் தாக்குதலைத் தடுக்கிறது. மேம்பட்ட உடல் சுழற்சிக்கு எந்தவித இடர்ப்பாடும் இல்லாமல் நம்மைக் காக்கிறது.

முட்டைகோஸ்

குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம்பெற, முட்டைகோஸில் உள்ள ‘குளூட்டோமைன்’ என்ற அமிலம் உதவுகிறது. ரத்தம் சுத்திகரிக்க, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.

கோதுமை

கோதுமையில் மாவுச்சத்து சற்றுக் குறைவு என்பதால், உடலில் தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுத்து, ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. நரம்பு மண்டலமும் மூளையும் நன்கு செயல்படவும், புதிய செல்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. தைமஸ் சுரப்பி விரைந்து செயல்பட, முழுக் கோதுமையில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் துணைசெய்கிறது.

ஆரஞ்சு

சிட்ரிக் அமிலம், வைட்டமின் சி மிகுந்த இந்தப் பழம், ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. காற்று மற்றும் நீர் மூலமாகப் பரவும் நோய்க் கிருமிகளிடம் இருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது.

நட்ஸ்

பாதாம் பருப்பு, வேர்க்கடலை உள்ளிட்ட நட்ஸில் உள்ள வைட்டமின் இ, ரத்த வெள்ளை அணுக்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. இதனால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

கீரைகள்

கீரைகளில் பல்வேறு வகையான வைட்டமின்கள், நுண்ணூட்டச்சத்துகள், தாதுஉப்புக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதுடன், உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும், செரிமான மண்டலத்தைச் சரியாக இயங்கச்செய்து ஆரோக்கியத்தைக் காக்கின்றன.

தேநீர்

தேநீரில் உள்ள மக்னீசியம், நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ராணுவ வீரர்களைப் போன்று செயல்படுகிறது. சூடான ஒரு கப் தேநீர் அருந்துவதால், நோய்த் தொற்றைத் தடுக்கலாம். மூளையைச் சுறுசுறுப்பாக்கி, நம்மைத் துடிப்புடன் வைத்திருக்கவும் உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை பால் சேர்க்காத தேநீர் பருகுவதில் தவறு இல்லை.

மாதுளை

மாதுளைச்சாறு, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கிறது. ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் குறைக்கின்றன. ரத்தம் உறைதல் பிரச்னையில் இருந்து காக்கின்றன. தொடர்ந்து மாதுளை உண்பதன் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்தத்தின் ஆக்சிஜன் அளவை மேம்படுத்தலாம்.

இஞ்சி

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால்(Gingerol), ரத்தத்தைச் சுத்திகரிக்கிறது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. செரிமானத்தைச் சீராக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

நன்னாரி வேர்

மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சிறந்தது. மேலும், இந்த வேரில் ஆன்டிசெப்டிக் பொருள் நிறைவாக உள்ளது. இது, ரத்தத்தில் இருக்கும் கிருமிகளை அழித்துச், சுத்தமாக வைக்கிறது.

பீட்ரூட்

இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. ரத்த வெள்ளை அணுக்கள் உற்பத்திக்கான புரதமும் உள்ளது. பீட்ரூட்டின் மேல் இருக்கும் தண்டில் வைட்டமின் ஏ-வும், அதன் வேர்களில் வைட்டமின் சி-யும் நிறைவாக உள்ளதால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

கற்றாழை

கற்றாழைச் சோற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கற்றாழை, உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. ரத்த நாளங்களை ஆரோக்கியமாக்குகிறது. இதனால், ரத்த ஓட்டம் சீராகிறது.

No comments: