என்ன தான் சம்பாதித்தாலும் எனக்கு வருமானம் பத்தலை என்பார்கள் பல பேர். ஆனால், ஒரு சிலர் வருமானத்தில் பெரும் பங்கு வருமான வரியிலேயே போய் விடுகிறது என்பார்கள். கஷ்டப்பட்டு உழைத்து பணம் சம்பாதிப்பது என்பது கஷ்டமான காரியம் தான். ஆனால், நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வரி சேமிப்பு என்ற பெயரில் மிச்சப்படுத்துவது எளிதான விஷயம் தான்.
ஆனால், நம்மவர்கள் என்னதான் 365 நாள்கள் கஷ்டப்பட்டு உழைத்தாலும் மார்ச் 31-ம் தேதி நெருங்கும்போது தான் பல பேருக்கு வருமான வரியைப் பற்றி நினைப்பே வருகிறது. மற்ற நாள்களில் இதைப் பற்றி சிந்தனையோ, வரி சேமிப்பு குறித்த எண்ணமோ துளியும் வருவதில்லை. ஆனால், மார்ச் 31-ம் தேதி நெருங்கும்போது மட்டும் கண்ணுக்கு கிடைக்கும் வரி சேமிப்பு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் பணத்தை முதலீட்டு செய்பவர்கள் இன்னும் பல பேர் இருக்கின்றனர்.
ஆனால், முறையற்றத் திட்டங்கள் அல்லது மோசமான திட்டங்களில் முதலீடு மேற்கொண்டால், 100 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 1,000 ரூபாய்க்கு நஷ்டமடைந்த கதைபோல் மாறிவிடும். அதே நல்ல திட்டங்களில் முதலீடு மேற்கொள்ளும் போது வரி மிச்சமாவது மட்டுமில்லாமல் வருமானமும் அதிகரிக்கிறது. வருமான வரியைப் பொறுத்தவரை வரியை மிச்சப்படுத்தப் பல வழிகள் உள்ளன. இது மாத சம்பளதாரர், பணக்காரர்களுக்கு மட்டுமில்லை சாமானியனுக்கும் பொருந்தும். எந்தெந்த திட்டங்களின் மூலம் எவ்வளவு வரி சேமிக்க முடியும் என்பதைவிட, எதன் மூலம் எல்லாம் வரி சேமிக்க முடியும் என்பதைப் பார்க்கலாம்.
வரி சேமிப்பு திட்டங்கள்!
ஈக்விட்டி சார்ந்த சேமிப்பு திட்டம் (இ.எல்.எஸ்.எஸ்), தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்.பி.எஸ்), பொது வருங்கால வைப்பு நிதி (பி.பி.எஃப்), சுகன்யா சம்ரூதி யோஜனா, முதியோர் சேமிப்பு திட்டம், வங்கி பிக்சட் டெபாசிட், ஓய்வூதியத் திட்டம், யூலிப், இன்ஷூரன்ஸ் பாலிசி எனப் பல திட்டங்கள் இருக்கின்றன. இந்தத் திட்டங்களில் முதலீட்டினை மேற்கொண்டு வருமான வரியிலிருந்து விலக்கு பெறுவதோடு மட்டுமில்லாமல் வருமானத்துக்கும் வழிவகுக்கலாம்.
வீட்டுக் கடன்!
வீட்டுக்கடன் வாங்கும்போது நாம் மாதந்தோறும் இ.எம்.ஐ செலுத்தி வருகிறோம். இதை இரண்டு விதமாகப் பிரிப்பார்கள். ஒன்று அசல், மற்றொன்று வட்டி. ஒருவர் கட்டக்கூடிய அசலை வரி விலக்கில் காண்பித்து வரியை மிச்சப்படுத்த முடியும்.
வீட்டு வாடகை!
வீடு வாங்குபவர்கள் மற்றும் வீடு கட்டுபவர்களுக்கு மட்டும் வரிச்சலுகை என்பதில்லை, வீட்டு வாடகைக்குக்கூட வரி விலக்கு வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான குடியிருப்பு வீடு மற்றும் விடுதிகளில் உரிமையாளர்கள் வீட்டு வாடகைக்கான ரசீதுகளை வழங்குவதில்லை. நாமும் ரசீதுகளைக் கேட்டுப் பெறுவதும் இல்லை.
கல்விக் கடன்!
ஒருவர் தன்னுடைய குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரிகளில் டியூசன் பீஸ் என்று சொல்லப்படும் பயிற்சிக் கட்டணத்தை வருமான வரியில் இருந்து விலக்கு பெற முடியும். இது ஒவ்வொரு ஆண்டும் மாறுபடலாம். அதற்குத் தகுந்தாற்போல் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை காண்பிக்கலாம்.
நன்கொடை!
மேலே குறிப்பிட்ட சில விஷயங்களில் எங்கும் பணத்தை முதலீடு செய்ய விரும்பவில்லை என்றால் குறைந்தபட்சம் தொண்டு நிறுவனம், அறக்கட்டளை, அனாதை ஆசிரமம் அல்லது முதியோர் இல்லத்துக்காவது உங்களால் முடிந்ததை நன்கொடையாக வழங்குங்கள். வாங்குபவர்களுக்குச் சந்தோஷமும், வழங்குபவர்களுக்கு நிம்மதியும் கிடைப்பதோடு மட்டுமில்லாமல் வரியில் இருந்து விலக்கும் பெற முடியும்.
`அவரு சொன்னார், இவரு சொன்னார்' என்று எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். எந்த ஒரு முதலீட்டுத் திட்டமாக இருந்தாலும் அலசி ஆராய்ந்து நல்ல முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து வருமான வரியை மிச்சப்படுத்துங்கள். இதை ஒரு தொல்லையாக யாரும் கருதாமல், நமக்குச் சேமிக்க கிடைத்த வாய்ப்பாகக் கருதலாமே.
No comments:
Post a Comment