'நீ
உருப்பட மாட்டே..., உன் மண்டையில் படிப்பே ஏறாதா?, படிக்காம என்ன
கிழிக்கிற?' என்ன பாஸ்... இதெல்லாம் நீங்க படிக்கும்போது வாங்கின திட்டு
மாதிரியே இருக்கா? இதெல்லாம் எக்ஸாம் நேரங்களில் நானும்
வாங்கியிருக்கிறேன். இப்படியான வசவுகளால் தாழ்வு மனப்பான்மை உருவாகக்கூடாது
என்பதற்காக பொதுத்தேர்வு எழுதச் செல்லும் தங்கள் மாணவர்களுக்கும்,
அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு பள்ளியின் சார்பில் கடிதம்
அனுப்பியிருக்கிறார்களாம். அன்பார்ந்த பெற்றோர்களே! ஆசிரியர்களே...
உங்களுக்குத்தான் இந்தப் பதிவு.
காலேஜில் கூட பெரிதாக இந்தப் பஞ்சாயத்துகளுக்கு ஆளாக மாட்டோம். ஆனால்
ஸ்கூல் படிக்கும்போது வகைதொகையில்லாமல் வாங்கிக் கட்டியிருப்போம். பரீட்சை
வந்துவிட்டால் போதும், பெற்றோர்கள் பிள்ளைகளை பிழிந்து எடுத்துவிடுவார்கள்.
ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ரகமாக டார்ச்சர் தருவார்கள். வீட்டுக்கு ஒரே
பிள்ளை என்றால் தப்பித்துவிடலாம். கூடப் பிறந்தவர்கள் யாராவது இருந்தால்
அதுவும் நல்லா படிக்கிற பிள்ளையாக இருந்தால் வீட்டில் போர்க்களம்தான்.
பரீட்சை நேரங்களில் பிள்ளைகள் படும் கொடுமைகளை நினைத்துப் பார்த்தால்
ரத்தக்கண்ணீர்தான் வரும். பரீட்சையில் பிள்ளைகள் நன்றாக ஸ்கோர் பண்ண
வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பதில் தவறொன்றும் இல்லை. ஒவ்வொரு
பெற்றோரும் தன் பிள்ளை இப்படி ஆக வேண்டும்... அப்படி ஆக வேண்டும் என்று
கனவுக்கோட்டை கட்டுவதில் தவறு சொல்ல முடியாது. தன் பிள்ளைகளைப் பற்றி சில
விஷயங்களைக் கருத்தில் கொள்வதும் நல்லதுதானே...
ஒவ்வொரு வீட்டிலும் மக்கு என்று மட்டம் தட்டும் ஒரு ஆள் கண்டிப்பாக
இருப்பார். அப்படி மக்கு என்று மட்டம் தட்டும் ஆளை ஒரு
பூங்காவுக்குக் கொண்டு போவோம். அங்கே கலவையாய் நிறைய நிகழ்ச்சிகள்
நடக்கும். ஒரு இடத்தில் குழுவாய் ஒன்றுகூடி கிரிக்கெட், கண்ணாமூச்சி எனப்
பல விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
இந்த சத்த சந்தடிகளில்
சிக்காமல் ஒரு ஓரமாக பெஞ்சில் உட்கார்ந்து ஒருவர் மும்முரமாகப் புத்தகம்
படித்துக்கொண்டிருப்பார். அந்தப் பூங்கா முழுவதும் ஒரே டிசைனில் பல்வேறு
யானை சிலைகள் இருக்கும். பூங்காவில் எப்பொழுதும் இசை ஒலித்துக்கொண்டே
இருக்கும். பூங்காவில் உள்ள பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும் கருவி
(ஸ்ப்ரிங்ளர்) இருக்கும்.
அங்கு செல்லும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதோவொரு நிகழ்வு மட்டும்தான்
கண்ணுக்குத் தெரியும். விளையாட்டின் மீது ஆர்வமாய் இருப்பவர்கள் அந்தப்
பூங்காவில் யார் எந்த விளையாட்டை விளையாடுகிறார்கள் என்று
தெரிந்துகொள்வதில் மும்முரமாய் இருப்பார்கள். மற்றொரு சிறுவனுக்கு அந்தப்
பலகையில் உட்கார்ந்து புத்தகத்தைப் படிக்கும் நபர் எந்தப் புத்தகத்தை
படிக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். எங்கு
பார்த்தாலும் யானை மட்டுமே கண்ணுக்குத் தெரியும் சிறுவனுக்கு அங்கே
மொத்தமாக எத்தனை யானைகள் இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும்.
ஒரு சிறுவனுக்கு அங்கு ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலின் இசை
பிடித்துப்போக அந்தப் பாடல் இடம்பெற்ற படம் என்ன? அது என்ன பாடல் என்று
தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும். செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சும்
கருவி மீது ஆர்வம் காட்டும் சிறுவனுக்கு எப்படி அந்தக் கருவிக்குள்
இருந்து தண்ணீர் வெளிவருகிறது? எங்கிருந்து தண்ணீர் வருகிறது? என்று
தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும்.
இங்கு சொல்வது சில நிகழ்வுகள் மட்டுமே. இதைப்போல் பல நிகழ்வுகள்
சுற்றிலும் நடக்கும். அப்படி நடக்கும் நிகழ்வுகளில் ஒவ்வொரு சிறுவனும்
ஒவ்வொன்றைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பான். விளையாட்டின் மீது ஆர்வமாக
இருக்கும் சிறுவன் ஒரு விளையாட்டு வீரனாகவோ, என்ன புத்தகத்தைப் படிக்கிறார்
என்று தெரிந்துகொள்ள துடிக்கும் சிறுவன் ஒரு இலக்கியவாதியாகவோ, எத்தனை
யானை இருக்கிறது என்று எண்ணத் துடிக்கும் சிறுவன் ஒரு கணித மேதையாகவோ, என்ன
இசை ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று தெரிந்தகொள்ளத் துடிக்கும் சிறுவன்
ஒரு இசைஞானியாகவோ, தண்ணீர் எப்படி அந்தக் கருவியிலிருந்து வருகிறது என்று
தெரிந்துகொள்ளத் துடிக்கும் சிறுவன் ஒரு விஞ்ஞானியாகவோ ஏன் ஆக முடியாது?
குழந்தைகளின் திறமைகளைக் கணித்து அவன் எதில் ஆர்வமாக இருக்கிறானோ அதை
நோக்கி அவனை வழிநடத்தினாலே போதும். நிச்சயமாக அவன் ஒரு நாள் சமூகத்தின்
மதிப்புமிக்க நபராக வருவான் என்று முதலில் பெற்றோர்கள் அவன் மீது நம்பிக்கை
வைக்க வேண்டும். அதற்குப் பதில் பூங்காவில் நடக்கும் ஒட்டுமொத்த
விஷயத்தையும் ஒருவனுக்குள் புகுத்த நினைத்தால் தோல்வியில் தான் முடியும்.
பரீட்சையில் வரும் மதிப்பெண்கள் ஒரு மாணவனின் அறிவைத்
தீர்மானித்துவிடாது. மதிப்பெண்கள் அதிகமாக எடுத்தால் என்ஜினீயர், டாக்டர்.
குறைவாக எடுத்தால் ஆர்ட்ஸ் காலேஜ் என்ற எண்ணத்தோடு இருந்திருந்தால் அதைச்
சற்று மாற்றிக் கொள்ளுங்கள். இலக்கை நோக்கிய பயணத்தோடு முன்னேறலாம்.
உங்களுக்கு உங்கள் பிள்ளைகளுக்கும் எங்கள் நல்வாழ்த்துகள்.
No comments:
Post a Comment