Wednesday, March 15, 2017

தூக்கணாங் குருவிக் கூட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்கு சொல்லித் தருவோமா?



தூக்கணாங் குருவிக் கூட்டை பார்த்திருக்கிறீர்களா? அதன் அழகைச் சொல்ல வார்த்தைகள் ஏது?. தன் சின்ன அலகால் கூடு கட்டும் அதன் நேர்த்தியே அலாதியானது. கிராமங்களின் வயல்வெளிகளில், வளர்ந்து நிற்கும் நெடுமரங்களின் கிளைகளில் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் இந்த சின்னக் கூடுகள் சொல்லும் பாடங்கள் ஏராளம். அறிவியலின் வளர்ச்சியால் சிட்டுக் குருவிகளின் இனத்தை மெள்ள மெள்ள இழந்து கொண்டிருக்கிறோம் . இளம்மஞ்சள் நிறத்தில் அதிகாலையில் கதிரவன் எழும் நேரத்தில் நம் வீட்டுத் தாழ்வாரத்தில் குறுகுறுவென கூச்சலிடும் சிட்டுக்குருவிகள் அதன் நிறத்தைப் போலவே சாம்பலாகிப் போன சரித்திரம் மட்டுமே மிச்சமாய் இருக்கிறது நம்மிடத்தில். சிட்டுக்குருவிகளைப் போலவே தூக்கணாங் குருவிகளையும் தூரத்து கதைகளாக நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

            

நம் அன்றாட வாழ்வில் குறைந்த பட்சம் வீட்டு விலங்குகளாக நாய், பூனை, பசு, ஆடு இவற்றை எல்லாம் நேரடியாக தினமும் பார்த்துக் கொண்டிருந்தோம். பறவைகளாக காக்கை, கோழி, குருவி, இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம். கிராமங்கள் தொலைந்த நகர வாழ்வில் கோழிகளை பிராய்லர் கோழிகளாகவும் காக்கைகளை நெரிசல் இல்லாத சாலைகளின் மின்கம்பங்களிலுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படியே போனால் மனிதன் அல்லாத மற்ற உயிரினங்களை இணையங்களில் மட்டுமே டவுன்லோடு செய்து பார்த்துக் கொண்டிருப்போம்.

                     


நேரடியாய் எதையும் கற்கவோ ரசிக்கவோ வாய்ப்பற்ற வாழ்க்கை முறை வாய்த்தவர்கள் நம் குழந்தைகள். டிஸ்கவரி சேனல்களில் மட்டுமே விலங்குகளும் பறவைகளும் வாழ்ந்து கொண்டிருப்பதாய் அவர்களை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பொம்மைகளாகவே டைகர், லயன், ஸ்பேரோ, க்ரோ ...என பாடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வரவேற்பறையில் இருக்கும் லெதர் சோபாவுக்குள் ஒளிந்திருக்கும் ஒரு விலங்கின் தோலைப் பற்றியோ, பால்கனியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் வார்னிஷ் பூசப்பட்ட மூங்கில் மரத்தின் வரலாறு குறித்தோ அவர்கள் அறியாமலேயே நகர்ந்து போகின்றது வீடியோ கேம்ஸ் வாழ்க்கை முறை.

                   


நகரமயமாதல் என்பதே மனிதனை இயந்திரமாக்குவது தானே. இந்த அவசர யுகத்தில் கிராமங்களின் வாழ்க்கைமுறையை ஒருமுறையேனும் தேடிப் பயணிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். 

’நான் படிச்சிட்டு இன்ஜினீயர் ஆகப் போறேன்’ என்று சொல்லும் குழந்தைக்கு இயற்கை கொடுத்திருக்கும் இன்ஜினீயரான தூக்கனாங்குருவி பற்றி சொல்லிக் கொடுத்திருக்கிறோமா?. தேங்காய் நார், வைக்கோல், இலைகள் என தன் கண்ணுக்கு எட்டும் எல்லாவற்றையும் தன் அலகால் எந்த அளவுக்குப் பாரம் சுமக்க முடியுமோ அந்த அளவுக்கு தூக்கிக் கொண்டு வந்து தன் இணைக்கு கூடு கட்டும் தூங்கணாங் குருவி அன்பின் அடையாளம்.
 
 இங்கே கட்டுவது என்றால் கொத்தனார் சிமெண்ட் கலவையை செங்கலில் பூசிக் கட்டுவாரே ... அப்படி அல்ல. ஒவ்வொரு நாரையும் அலகில் வைத்துக் கொண்டு கிளையில் அதை முடிச்சிட்டு மெதுமெதுவாய் வளைவு நெளிவுகளோடு முழுதாய் கூடு செய்யும் மாயப் பறவைகள் அவை. நினைத்துப் பாருங்கள். கைகள் இல்லாமல் ஒற்றை மூக்கால் ஒரு வாழ்வாதாரத்தை உருவாக்கும் அந்த சின்னக் குருவிகள் தன்னம்பிக்கையின் அடையாளம் அல்லவா?.



                                              


நேராக ஒரு பின்னல். அதிலிருந்து தொடரும் தொப்பை போல ஒரு வளைவான அமைப்பு , அங்கிருந்து மீண்டும் குழாய் போல ஒரு வளைவு என முட்டையிடும் தன் இணைக்குப் பாதுகாப்பாய் வீடு செய்யும் தூங்கணாங்குருவி பாசத்துக்குச் சிறந்த உதாரணம். மின்விளக்கு இல்லாத காலத்தில் ராந்தல் விளக்குகளை வீடுகளில் பயன்படுத்தி இருப்போம். தூங்கணாங்குருவிகளுக்கு ராந்தல் விளக்கு எது தெரியுமா?. 
 
மின்மினிப் பூச்சிகள். கழனியில் சகதியில் இருந்து சின்ன களிமண் துளியை கொண்டு வந்து தன் கூட்டுக்குள் வைத்துவிட்டு அதில் மின்மினிப் பூச்சிகளை ஒட்ட வைத்து வீட்டுக்கு ஒளிகூட்டும் தூங்கணாங்குருவிகள் நம் எலெக்ட்ரீஷியன்களுக்கு முன் உதாரணம். காற்றில் விழாத அழுத்தமான பிடிமானத்தைக் கொண்டு தன் ஒற்றை அலகால் உறுதியாய் அறுந்து விழாத கூடு கட்டும் இந்த சின்னக் குருவிகள் உணர்த்தும் பாடம் இதுதான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!.

’ வாருங்கள். சில நாட்களாவது கிராமம் நோக்கிப் பயணிப்போம். குருவிகள் கூடு கட்டும் அழகை தூரத்தில் இருந்து ரசிப்போம். அதன் அருமைகளை நம் குழந்தைகளுக்குச் சொல்லி மகிழ்வோம். நீங்கள் மீண்டும் நகரத்துக்கு நகர நேர்ந்தாலும் நிச்சயமாக உங்கள் வீட்டு பால்கனியில் இறைந்து கிடைக்கும் தானியங்களைத் தேடி சில பறவைகள் அமர்ந்திருப்பதை நாளை உங்கள் குழந்தைகளும் நெருக்கமாய் கண்டு ரசிக்கலாம்.

No comments: