Monday, March 13, 2017

மொய் வசூல் மெஷின்! - மதுரைப் பங்காளிகளின் அமளி




அங்கிட்டு ராக்கெட்டை அனுப்புனா, இங்கிட்டு மொய் வசூலிக்க மெஷின் கண்டுபுடிச்சுக்கிட்டு இருக்காய்ங்க. மதுரைக்காரங்க அலும்புக்கு அளவே இல்லை. மொய் வசூலிக்க மெஷினா என ஆச்சர்யமாகக் கேட்டால், ''அட ஆமா பங்காளி , மதுரைல எங்க ஏரியா செக்காணூரனி. வாரத்துக்கு ஒரு விசேஷம், மாசத்துக்கு ஒரு திருவிழானு இருக்கிற ஊரு. செய்முறை செஞ்சே பூராப்பயலுகளுக்கும் டவுசர் கழண்டுரும், செய்றவங்களை விட மொய் எழுத உட்காருற ஆட்களுக்கு அதுக்கு மேல. ரெண்டு ஒரு குயர் நோட்டு ஃபுல்லா பேரு எழுதி இருக்கும், யாரு எவ்ளோ செஞ்சுருக்காங்கனு பார்த்து அவுக வீட்டு விஷேசத்துக்கு மறு மொய் செய்றதுக்குள்ள மறு விஷேசம் வந்துரும். இப்படித் தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு ரொம்ப சிரமமா இருக்கும்னு தோணுச்சு, அப்போதான் நாமளே இதுக்கு ஒரு சாஃப்ட்வேர் கண்டுபுடிக்கலாம்னு யோசிச்சு பண்ணுனேன்'' குந்தாங்கூரா யோசிச்ச ஐடியா பற்றி சிலாகித்துச் சொல்கிறார் பிரபு.

                                   

''படிச்சது பி.பி.ஏ. முடிச்சுட்டு மொபைல் ஷாப் வெச்சுருக்கேன், போன வருஷம் இந்த சாஃப்ட்வேரைக் கண்டுபிடிச்சு, என்னோட சொந்த பயன்பாட்டுக்காகத்தான் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன். அதைப் பார்த்த ஒருத்தர் அவரோட ஃபங்ஷனுக்கு வைக்கச் சொல்லி கேட்டப்போ நேத்துதான் முதல் தடவை பொதுப்பயன்பாட்டுக்கு கொண்டு வந்தேன், அதுலேயே இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக்கிட்டோம். அதாவது யாருக்கெல்லாம் பத்திரிகை கொடுத்தாரோ, அவங்களோட மொபைலுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாலேயே ஒரு ரிமைண்டர் மெசெஜ், ஃபங்ஷனோட முதல்நாள் வாய்ஸ் காலும் போகிற மாதிரி ஐடியா பண்ணி அது ஒர்க் அவுட் ஆச்சு. மொய் எழுதுற இடத்துல இதைப் பார்த்துட்டு பாதிப் பேருக்கு பயமாயிருச்சு. என்னாடா இது கொடுக்குற காசு ஒழுங்கா வரவு வைப்பாங்களான்னு. அதுக்கப்புறமா ப்ரின்ட் போட்டு கையில கொடுத்தப்போதான் நம்பிக்கையோட செஞ்சாங்க. நாம மொய் நோட்டுல எழுதுற மாதிரிதான் இதுக்கும். ஆனா எழுதி முடிச்ச பிறகு ஊர் வாரியா, ஏரியா வாரியா யார் யார் எவ்வளாவு செஞ்சுருக்காங்கன்னு தனித்தனியா டீட்டெயில் எடுத்துக்கலாம். ஃபங்ஷனுக்கு வந்த ஆளுங்களுக்கெல்லாம் ரொம்பப் புடிச்சுப்போச்சு.''

                      

                               

சரிங்க பாஸூ, மெஷின் விலை எவ்வளவு?
"இந்த மெஷின் விற்கிறதுக்காக பண்ணலைங்க, என்னோட சொந்த உபயோகத்துக்காகப் பண்ணினதுதான். அதுவும் போக, வேற யாருக்காச்சும் தேவைப்பட்டுச்சுன்னா நானே நேர்ல போய் மொய் எழுதிக் கொடுக்க மூவாயிரம் ரூபாய் வாங்கலாம்னு இருக்கேன். மொய் எழுதிக் கொடுத்து, மொத்த லிஸ்ட்டையும் உங்க போன்லயோ இல்லை தனியாவோ ப்ரின்ட்டும் எடுத்துக் கொடுத்துருவேன். இல்லை... மெஷின் மட்டும் வேணும், நீ வேணாம்னு சொன்னாங்கன்னா, சாஃப்ட்வேர் மட்டும் செஞ்சு கொடுக்கலாம்னு ஒரு யோசனை இருக்கு, பார்க்கலாம் எப்படின்னு'' என்கிறார் பவ்யமாக. மூட்டைப் பூச்சியைக் கொல்லும் நவீன மெஷினை ரோல்மாடலா வெச்சுருப்பாரோ..?

மதுரைக்காரய்ங்க மூளையோ மூளை!

No comments: