Monday, March 20, 2017

தண்ணீர் சேமிக்க வாஷிங் மெஷினை முழுதாக நிரப்புங்கள்... ஷவரில் குளியுங்கள்!



நீர் நிலைகளில் நிறைந்திருந்த தண்ணீரை உறிஞ்சியதோடு அல்லாமல், உடலின் வியர்வைத் துளிகளையும் கூட தாகத்துடன் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது சூரியன். வெயில் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை நோக்கி சென்னை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இன்று நாம் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீர் தான், நாளை நம் தாகத்தை தீர்க்கப்போகிறது. 
 
தண்ணீர் சேமிக்க அரசாங்கம் சரியான திட்டங்களை இடவில்லை, காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடவில்லை, முல்லைப் பெரியாரின் தண்ணீரை கேரளா மறித்துவிட்டது, இயற்கையே மாறிவிட்டது, மழையில்லை, தண்ணீருக்கு என்ன செய்ய? என நம் கை மீறிய பல விஷயங்களை மட்டுமே குறை சொல்லாமல், ஒரு தனி மனிதனாக , சின்ன சின்ன செயல்பாடுகளின் மூலம் எப்படி தண்ணீரை சேமிக்கலாம் என்பதை நாம் எண்ணி, செயல்பட வேண்டிய தருணம் இது.

   

ஒரு லிட்டருக்கு, ஒரு லிட்டர் வீண்:

இன்றைய நகர வீடுகளில் பெரும்பாலும், "ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ்" (Reverse Osmosis) என்று சொல்லக்கூடிய ஆர் தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கிறோம். குடிப்பதற்கும், சமையலுக்கும் இதைத் தான் பயன்படுத்துகிறோம். ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீரை கொடுக்க ஒரு லிட்டர் தண்ணீரை வெளியேற்றுகிறது இந்த தொழில்நுட்பம். வெளியேற்றப்படும் தண்ணீரிலிருக்கும் பாக்டீரியாக்கள், காற்று பட்டவுடன் அரை மணி நேரத்தில் அழிந்துவிடும். இப்படி வெளியேறும் அந்த நீரை வீணாக்காமல், ஒரு பக்கெட்டில் பிடித்து வைத்து வீடு துடைப்பது, பாத்ரூமுக்கு உபயோகப்படுத்துவது போன்ற விஷயங்களை செய்யலாம்.

     



பாத்திரம் கழுவும் போது தண்ணீர் பத்திரம்:

பாத்திரம் கழுவும் போது குழாயைத் திறந்து தண்ணீர் உபயோகிப்பதை தவிர்க்கலாம். ஓடும் தண்ணீரை உபயோகிப்பதை தவிர்ப்பதன் மூலம் பெருமளவிற்கான தண்ணீரை சேகரிக்க முடியும். மாறாக, பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி வைத்து, அதிலிருந்து எடுத்து கழுவலாம். அதே போன்று, குளிப்பதற்கு ஷவர் உபயோகிப்பதும் தண்ணீர் வீணாக இரைவதை தடுக்கும்.

                            

வாஷிங் மெஷினை முழுதாக நிரப்புங்கள்:

வாஷிங் மெஷினில் துணியைப் போடும் போது, அதன் முழு கொள்ளளவிற்கு துணிகளைப் போடுவது நல்லது. குறைவாக போட்டாலும், நிறைத்துப் போட்டாலும் ஒரே அளவிற்கான நீரைத் தான் வாஷிங் மெஷின்கள் எடுத்துக் கொள்ளும். வாஷிங் மெஷினை "டிரெய்ன்" செய்யும் போது வெளியேறும் சோப் தண்ணீரை வீணாக பாத்ரூமில் விடுவதைக் காட்டிலும், எண்ணெய் பிசகு வாய்ந்த சமையல் பாத்திரங்களை அதில் ஊறவைக்கலாம்.

                              

தண்ணீரை சுத்தமாக்கும் படிகாரம்:


போரில் (Bore) தண்ணீர் குறைந்தாலோ, தண்ணீர் தொட்டியில் அழுக்குப் படிந்திருந்தாலோ, குழாயில் வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கும். இதை நாம் உபயோகப்படுத்தாமல் தண்ணீரை வீணாக்குவோம். அதற்கு மாற்றாக, இது போன்ற கலங்கல் நீரை பக்கெட்டில் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் படிகாரக் கல்லை பக்கெட்டில் போடுங்கள். தண்ணீரை கைகளால் சுழற்றியபடி படிகாரக் கல்லை கரையுங்கள். 15 நிமிடங்களில் அழுக்கு கீழே படிந்து, தெளிவான நீர் கிடைக்கும்.

    
இந்த விஷயங்களை செய்ய அதிக பணமோ, நேரமோ செலவாகாது. ஆனால், இதன் மூலம் நாம் சேமிக்கும் தண்ணீர் விலைமதிப்பற்றதாக இருக்கும்.

No comments: